இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்; கிராமவாசிகள் அச்சம்

இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து…

இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சரியான கட்டமைப்பு இல்லாததே இந்த விபத்து நேர்ந்ததற்குக் காரணம் என அதிகாரிகள் ஆய்வு செய்ததில் தெரியவந்தது.

தற்போது தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, இருமன்குளம் கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மைய கட்டடம், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில், சுவர்களில் விரிசல் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகளை அங்கு அனுப்பப் பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கவனமின்மையால் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க நேரிடுமோ எனப் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.