மாதாந்திர மின் கணக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக சமீபத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கையைத் தான் திமுக அரசு எடுத்துவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று, விசம் போல ஏறும் விலைவாசி, வேலையின்மை, ஊதிய உயர்வின்மை உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு என்ற முறையையாவது அரசு செயல்படுத்துமா என மக்கள் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், மாதாந்திர மின் கணக்கீடு முறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.







