நடுநிலைப்பள்ளி கட்டடம் சேதம் அடைந்தது குறித்து நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் அவற்றை அகற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாராப்பூர் நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் சேதம் அடைந்திருந்தது. தகவலறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நேரடி ஆய்வு மேற்கொண்டார். பின்பு சேதமடைந்த கட்டிடத்தை இடிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கட்டிடம் இடிக்கப்படும் போது அருகிலிருந்த மற்றொரு கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த கட்டிடத்தையும் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் நேற்று இதுகுறித்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தியும் வெளியானது.
இதனிடையே, நெல்லையில் தனியார் பள்ளியின் கழிப்பறை கட்டிடம் இடிந்து, 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை அடுத்து, தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளில் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கொண்ட குழு, நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 99 பள்ளி கட்டிடங்களும், 58 அங்கன்வாடி மைய கட்டிடங்களும், 16 கழிப்பறை கட்டிடங்களும், 68 பள்ளி சத்துணவு சமையல் அறை கட்டிடங்களும் பயன்பாட்டிற்குத் தகுதி இல்லாதவை எனக் கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தி, அதற்குப் பதிலாக மாற்றுக் கட்டடங்கள் கட்ட மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.