டிஜிபி சைலேந்திரபாபு குரலில் பேசி பாஸ் மோசடியை அரங்கேற்றிய கும்பலுககு உதவி செய்த ஆந்திராவைச் சேர்ந்த 2 பேரை நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். “இரும்புத்திரை” பட பாணியில் மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலம். 
தமிழக ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை பதற வைத்துள்ள “பாஸ் மோசடி” குறித்து பல மாவட்ட காவல்துறையின் சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12 வது பட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திகேயனிடம் டிஜிபி சைலேந்திரபாபு குரலிலேயே பேசி ரூ. 7.5 லட்சம் மோசடி நடந்தது. மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பெயரை பயன்படுத்தி மதுரையில் பணிபுரிந்து வரும் மாநகராட்சி உதவி ஆணையர்கள் சிலரிடமும் பண மோசடியை “பாஸ் மோசடி” கும்பல் அரங்கேற்றி உள்ளது. பணத்தை இழந்த நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12 வது பட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திகேயன் நெல்லை மாவட்ட காவல்துறை சைபர் பிரிவில் புகார் அளித்தார். மோசடி மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முரளி, வினய்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். ஆந்திராவிற்கு சென்று தனிப்படை போலீசார் கைது செய்து நெல்லை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 பேரும் “பாஸ் மோசடி” கும்பலுக்கு சிம்கார்டுகளை விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. “பாஸ் மோசடி” கும்பல் நைஜிரிய நாட்டு சிம்கார்டுகளை பயன்படுத்திருப்பது கைதான 2 பேரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் “பாஸ் மோசடி” கும்பல் பயன்படுத்திய செல்போனின் ஐஎம்இ எண் மூலம் 59 சிம்கார்டுகளை பயன்படுத்தி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிம்கார்டுகளின் எண்கள் மூலம் அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தியபோது அந்த சிம்கார்டுகளை தாங்கள் பயன் படுத்தவில்லை எனவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேறொருவரின் ஆதார் கார்டு நகல்களை தவறாக பயன்படுத்தி போலி சிம்கார்டுகள் வாங்கி அதன் மூலம் “பாஸ் மோசடி”யை தலைமறைவு கும்பல் அரங்கேற்றியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. “இரும்புத்திரை” படத்தில் வருவது போலவே கைதான 2 பேரும் மோசடி கும்பலுக்கு உதவி செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டுகளை நகல் எடுக்க கொடுக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் கூடுதலாக நகல் எடுத்து வேறு சிம்கார்டுகளை வாங்கி மோசடி நபர்களுக்கு பலமடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாக கைதான 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திராவுக்கு சென்று தனிப்படை போலீசார் 2 பேரையும் நெல்லை கொண்டு வந்து “பாஸ் மோசடி” கும்பல் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ஆனால் “பாஸ் மோசடி” கும்பல் இதுவரை கைதாகவில்லை. அந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி உள்ளனர்.








