ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று
விட்டு விமானத்தில் சென்னை திரும்பிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
நிருபர்களிடம் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவித்ததும் தேர்தல் பணிக்குழுவை
அமைத்தோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக இடைக்கால
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் ஜி.கே.வாசனிடமும் தொலைபேசி
மூலம் பேசினேன். அவர்கள் கூறிய கருத்தை பாஜக மூத்த தலைவர்களுக்கு தேசிய
தலைமைக்கும் தெரியப்படுத்தி உள்ளேன். எங்கள் நிலைப்பாடு குறித்து 3 நாளில்
முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்றார்.
அத்துடன், எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியதற்கு மத்திய அரசு காரணம் சொல்லவில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்தும் அச்சுறுத்தல் இருக்கலாம். பாதுகாப்பு சார்ந்த விசயங்களில் மத்திய உளவுத் துறை கூறுவதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுப் பிள்ளையாக இருந்து விடக்கூடாது. அதே நேரம் எனக்கு வழங்கப்பட்டு உள்ள கூடுதல் பாதுகாப்பால் மக்களை சந்திப்பதில் பிரச்சனைகள்
இருக்கத்தான் செய்யும் என கூறினார்.
மேலும்,கட்சியில் கொடுக்கப்பட்டு உள்ள பணி கட்சியில் வளர்ச்சிப் பணியை செய்வது
தான். விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் தொடங்க உள்ளேன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடுவேனா என்று கேட்கின்றீர்கள்.
முதலில் பாஜக போட்டியிடுமா என்று பார்க்க வேண்டும். பிறகுமான் யார்
போட்டியிடுவது என்ற கேள்வி வரும். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாக
கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி கட்சியின் மூத்த தலைவர்களிடம் கருத்தை
தெரிவிப்பேன். கூட்டணி தர்மம், நியாயம் என்று இருக்கின்றது. குறுகிய கால
செயல்பாட்டுக்காக அதை மாற்றிக் கொள்ளக் கூடாது. 2021ம் ஆண்டு யார்
போட்டியிட்டார்கள் என்பதை பார்க்க வேண்டும். சிலவற்றை அனுசரித்து செல்ல
வேண்டும் என்றார்.
அத்துடன், தமிழகத்திற்கு திரும்ப ஜல்லிக்கட்டை கொண்டு வந்த கட்சி பாஜக. கொண்டு வந்தவர் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. நான் எனது தோட்டத்தில் ஜல்லிக்கட்டு காளை
வளர்த்து வருகின்றேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு வரவில்லை. அடுத்த ஆண்டு
ஜல்லிக்கட்டு போட்டியில் எனது காளை களமிறங்கும். மத்திய அரசு தடை
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எப்போதும் தடை விதிக்காது. விலங்கு ஆர்வலர்கள்தான்
ஜல்லிக்கட்டு குறித்து கற்பனையாக சில விசயங்களை நினைத்துக் கொண்டு வழக்கு
தொடுக்கின்றனர் என கூறினார்.
மேலும், தமிழகம், தமிழ்நாடு என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வார்த்தையை
நீக்கி பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடு. ஆனால் அரசியல் செய்வதற்கு வேறு விசயம் இல்லாததால் சில கட்சியினர் ஆளுநர் கூறியதை வைத்து அரசியல் செய்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆளுநர் தனது கருத்தை வெளியிட்டதாக கூறினார்.
அத்துடம், குஜ்ராத் கோத்ரா சம்பவம் குறித்து பிரதமர் பற்றி தவறான தகவலை பரப்பி உள்ளனர். இந்தியாவிற்கு வெளியில் யூடியூப்பில் பிரதமர் குறித்து தவறான தகவலை பரப்பும் வகையில் அந்த வீடியோவை பதிவிட்டு உள்ளது. தற்போது அவை நீக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 2022ம் ஆண்டு கொலை , வன்புணர்வு, கூட்டு வன்புணர்வு அதிகரித்து உள்ளது. கொரானா காரணமாகவே 2021ல் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் 2021ம் ஆண்டு தரவுகளை வைத்து டிஜிபி பேட்டி கொடுத்ததை பார்த்த போது மனது வலித்தது என தெரிவித்தார்.
மேலும், வரலாறு காணாத வகையில் 2022ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொலை, குற்றங்கள்
அதிகரித்துள்ளது. அது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளை நான் விரைவில்
வெளியிடுவேன். தமிழகம் கலவர பூமியாக மாற காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ள முதல்வர் விளக்கம் கூற வேண்டும்.
திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு எல்லாம் காவல் நிலையத்தில் என்ன வேலை. தண்ணீர்
இல்லாத காட்டுக்கு மாற்றுவேன் என அமைச்சர்கள் காவல்துறையினரிடம் பேசுவதை
முதல்வர் தடுக்க வேண்டும். முதல்வர் காவல்துறைக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்.
திமுக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் தான் முதல்வர் அறிவுரை சொல்ல
வேண்டும் என கூறினார்.
அத்துடன், கட்சியை விட்டு வெளியில் சென்றவர்கள் என்னை பற்றி குறை சொல்லத் தான்
செய்வார்கள். அவர்கள் வெளியில் சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என்றே
வாழ்த்துவேன். திமுகவினர் காலையில் இருந்து இரவு வரை அண்ணாமலை புராணம் தான் பாடுகின்றனர். இதற்கெல்லாம் நான் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.