முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: மநீம எடுக்கப்போகும் முடிவு என்ன?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

அடுத்த மாதம் 27ந்தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு வென்ற ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஜனவரி 31ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு சந்திக்கும் முதல் இடைத் தேர்தல் இது. கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் சூழலிலும், கூட்டணி நிலைப்பாடுகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் உலா வரும் நிலையில், உண்மை நிலை என்ன என்பதை இந்த இடைத் தேர்தல் வெளிப்படையாக உணர்த்தும். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான ஒரு பலப்பரிட்சை களமாகவும் இந்த இடைத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் நாடாளுமன்ற தேர்தல்தான் மக்கள் நீதி மய்யம் சந்தித்த முதல் தேர்தல். அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3.78 சதவீத வாக்குகளை பெற்றது.  ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 2.62 ஆக குறைந்தது. அந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவற்றுடன் கூட்டணி அமைத்திருந்த மக்கள் நீதி மய்யம் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும் குறிப்பிட்ட சில தொகுதிகளிலேயே மநீம 10 ஆயிரம் வாக்குகளை கடந்தது. அவ்வாறு மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்ற தொகுதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதியும் ஒன்று.

அந்த தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  4வது இடத்தை பிடித்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார், 10 ஆயிரத்து 5 வாக்குகளை பெற்றார். ஈரோடு கிழக்கு மொத்தம் பதிவான வாக்குகளில் 6.58 சதவீத வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன என்கிற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  அங்கு மநீம தனித்துப்போட்டியிடுமா அல்லது பிறக் கட்சிக்கு ஆதரவு அளித்து நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதை சூசகமாக வெளிப்படுத்துமா என்றும் தமிழ்நாடு அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கி வருவது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. தாம் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் பங்கேற்குமாறு  கமல்ஹாசனுக்கு,  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அழைப்புவிடுத்தார். இதனை ஏற்று கடந்த டிசம்பர் மாதம் 24ந்தேதி டெல்லியில் ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கைகோர்த்தார்.

ராகுல்காந்தியின் நடை பயணத்தில் தாம் பங்கேற்றதற்கு பின்னால் அரசியல் கூட்டணி  கணக்குகள் எதுவும் இல்லை என கமல்ஹாசன் மறுத்தாலும், நாட்டை வழிநடத்த ராகுல்காந்தியால்தான் முடியும் என கமல்ஹாசன் நம்புவதையே இந்திய ஒற்றுமை பயணத்தில் அவர் பங்கேற்றது காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்..அழகிரி கூறினார். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வழியாக திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணையலாம் அல்லது காங்கிரசுடன் தனித்தும் பயணிக்கலாம் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய பலப்பரிட்சை களமாக கருதப்படும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் களம் இறங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி பலம் வாய்ந்ததாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்தமுறை 8,904 வாக்குகள் வித்தியாசத்திலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த முறை வெற்றியை உறுதிசெய்ய மநீமவின் ஆதரவையும் பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு அவசியமானதாக இருக்கலாம். இந்நிலையில் இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை காங்கிரஸ் கோரவும் அப்படி கோரிககைவிடுத்தால் அதனை கமல்ஹாசன் கட்சி ஏற்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை மநீம தலைவர் கமல்ஹாசன் வரும் 23ந்தேதி கூட்டியுள்ளார்.  சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள்,  கோவை மண்டல அமைப்புச் செயலாளர், ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மநீம மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் மீண்டும் களம் இறங்குமா? அல்லது காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமா? அல்லது வேறு கட்சிகளுடன் புதிய கூட்டணி அமைக்குமா? அல்லது இடைத் தேர்தலில்  போட்டியிடுவதை புறக்கணிக்குமா? என்கிற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், வரும் 23ந்தேதி நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

– எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அக்னிபாத் திட்டத்திற்கான அறிவிப்பாணை வெளியீடு

Mohan Dass

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி; 500க்கு மேற்பட்ட குற்றவாளிகள் கைது

Arivazhagan Chinnasamy

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல்; வேட்புமனு தாக்கல் தொடக்கம்

EZHILARASAN D