மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக ஊழல் – பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துளளார். திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும்,…

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துளளார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதிகளில் இருந்தும், மாவட்டம் முழுவதும் இருந்தும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வ.உ.சி. மைதானம் இருக்கிறது. அண்ணா விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்படும் முன் இங்குதான் ஆண்டுதோறும் ஹாக்கி விளையாட்டு பிரபலமாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது. தென்மாவட்டங்களில் பல ஹாக்கி வீரர்களை உருவாக்கிய பெருமை இந்த வ.உ.சி. மைதானத்திற்கு உண்டு. பல்வேறு போட்டிகளுக்கான களமாக இருந்த இந்த வ.உ.சி. மைதானம் அண்மையில் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டது. மேலும், பார்வையாளர் போட்டிகளை அமர்ந்து பார்ப்பதற்கு நிழல் குடையும் அமைக்கப்பட்டது. நேற்று இந்த நிழற்குடை ஒரு சாதாரண மழைக்கே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது.

இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், பெருவாரியான பணிகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகே துவங்கியுள்ளது. இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடுவதற்கு முன்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முதன்மை செயலாளரான அபூர்வா அவர்கள் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வ.உ.சி விளையாட்டு அரங்கத்தின் புதுப்பித்தல் பணியைப் பார்வையிட்ட பின், பணிகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

8 மாத பயன்பாட்டிற்கு பிறகு இடிந்து விழுந்துள்ளது மேற்கூரை. யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என, அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திறனற்ற திமுக அரசு.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர் மீதும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.