பழைய ஊதிய முறையை அமல்படுத்த கோரி உணவு டெலிவிரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கோரி தமிழ்நாடு உணவு, இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நுாற்றுக்கு மேற்பட்ட ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உணவு டெலிவிரி செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஊதிய முறையை அமல்படுத்த வேண்டும், ஒரு கிலோமீட்டருக்கு 10 ரூபாய் வழங்கிட வேண்டும், ஒரு ஆர்டருக்கு மினிமம் 30 ரூபாய் வழங்கிட வேண்டும், காத்திருப்பு கட்டணத்தையும் வழங்க வேண்டும், முறையான காரணமில்லாமல் அபராதம் விதிக்கக்கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
மழை, வெயில்,கொரோனா என எதையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் உடனே அரசு தலையிட்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், எனவும் இல்லையென்றால் இப்போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
-அனகா காளமேகன்






