ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆதரிக்கும் வேட்பாளரை தோற்கடிக்கவே பாஜக தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளது என அக்கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில மேலிட பார்வையாளர் சி.டி.ரவி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
பாஜக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
- G 20 நாடுகளின் தலைமை பொறுப்பேற்றுள்ள பாரதப் பிரதமருக்கு பாராட்டும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
- தமிழக சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் அராஜகம் நடந்ததாக கூறி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சேது கால்வாய் திட்டம்- ராமர் பாலம் பாதிக்கப்படாமல் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம்.
- காசி தமிழ் சங்கமம் தந்த பாரத பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராம பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானம் கொண்டு நிறைவேற்றப்பட்டது.
- பெண்களுக்கான பாதுகாப்பை திமுக அரசு உறுதி செய்யவில்லை எனக் கூறி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழக விவசாயிகளையும், நெசவாளிகளையும் திமுக அரசு வஞ்சிப்பதாகக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழகம் தொழில் வளர்ச்சியில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது திராவிடல் மாடல் ஊழல் ஆட்சியால்தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பாரதி ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெ.பி.நட்டாவிற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் என 9 தீர்மானங்கள் தமிழக பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜக செயற்குழு தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்.பியுமான கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆதரிக்கும் வேட்பாளரை தோற்கடிப்பதே பாஜகவின் இலக்கு என்றார். இதற்காகவே பாஜக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக ஆதரிக்கும் வேட்பாளரை தோற்கடிக்க எந்தவிதமான வியூகங்களை மேற்கொள்வது என்பது தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் பாஜக தனது முடிவை அறிவிக்கும் என்றும் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.