நிதி ஆயோக் கூட்டம் – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணிப்பு!

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார்.  டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி…

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார். 

டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. அம்மாநிலத்தின் சார்பில் துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

முக்கியமான இந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்துகொள்ளாததற்கான சரியான காரணத்தை உடனடியாக வெளியிடவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ளாதது இது முதல் முறையல்ல. முன்னதாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலும் முதல்வர் நிதீஷ்குமார் கலந்துகொள்ளவில்லை, பிகார் பிரநிதியாக அப்போதைய துணை முதல்வர் கலந்துகொண்டார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் இரண்டு துணை முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், பிகாரைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்களும் நிதி ஆயோக்கில் உறுப்பினர்களாக பங்கேற்றார்கள். வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாட்டின் மிக உயரிய கொள்கை உக்திகளை வகுக்க நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் நிா்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் மோடி நிதி ஆயோக்கின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.