“ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவீர்களா?” – மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில…

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 27) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

இது தவிர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சிகள் ஆளும் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு கலந்து கொள்ளும் ஒரே முதலமைச்சர் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டுமே. இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று நான் கூறினேன். என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். ஆனால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை” என தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இதுதான் கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.