பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இந்திய வீரர்களில் ஆடை வடிவமைப்பாளர் மீது எழும் விமர்சனங்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களுக்கான ஆடையை வடிவமைத்த தருண் தஹிலியானி பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்களுக்கான ஆடையை வடிவமைத்த தருண் தஹிலியானி பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள்  ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது.

பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில்  200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, மைதான வளாகத்துக்குள் நிகழ்ச்சிகள் நடைபெறாமல் மைதானத்திற்கு வெளியே நதியில் தொடக்க நிகழ்ச்சிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஒலிம்பிக் போட்டியை தொடக்கி வைத்தார். 
ஒலிம்பிக்ஸ் போட்டி துவக்கி நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு நடைபெற்றது. பிரெஞ்சு கால்பந்து ஜாம்பவான் ஜினாதினே ஜிடேன் முதலில் ஜோதியை ஏந்திய நிலையில் ஜோதியானது ரபேல் நடால், செரினா வில்லியம்ஸ், நாடியா கோமானேசி என பலர் கைகளுக்கு மாறி இறுதியாகப் பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது.

இந்திய நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, இந்திய வீரர்கள் குழுவுக்குத் தலைமை தாங்கினார். படகில் இந்திய கொடியை பி.வி.சிந்து அசைக்கும் காட்சியை இந்திய ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர். அப்போது, அனைத்து இந்திய வீரர்களும் தேசியக் கொடியைத் தங்கள் கைகளில் வைத்திருந்தனர். பி.வி.சிந்து இந்திய கொடி பதித்த சேலை ஒன்றை அணிந்திருந்தார். அதேபோல் மற்ற இந்திய வீரர்களும் அணிந்திருந்தனர்.

பிரபல ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானி இந்திய வீரர்கள் அணிந்திருந்த ஆடையை வடிவமைத்துள்ளார். இந்த ஆடைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆண்கள் குர்தா-பூந்தி செட் அணிந்திருந்தனர். அதேபோல், பெண்கள் இந்தியக் கொடியின் மூவர்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புடவைகளை அணிந்திருந்தனர். ஆடைகள் பாரம்பரிய இகாட் பிரிண்ட் மற்றும் பனாரசி ப்ரோகேட் மூலம் அலங்கரிக்கப்பட்டன.

முக்கிய எழுத்தாளர் மற்றும் வர்ணனையாளரான நந்திதா ஐயர், துணி தேர்வு, இகாட் பிரிண்ட்களின் பயன்பாடு மற்றும் வடிவமைப்பு குறித்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “இந்த சீருடைகளை விட மும்பை தெருக்களில் 200 ரூபாய்க்கு சிறந்த புடவைகள் விற்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். மலிவான பாலியஸ்டர் போன்ற துணி, Ikat PRINT, கற்பனை இல்லாமல் வீசப்பட்டுள்ள மூவர்ணங்கள். நீங்கள் அதை ஒரு பயிற்சியாளரிடம் அவுட்சோர்ஸ் செய்தீர்களா அல்லது காலக்கெடுவுக்கு முந்தைய 3 நிமிடங்களில் அதைக் கொண்டு வந்தீர்களா? இந்தியாவின் வளமான நெசவு கலாச்சாரத்திற்கும் வரலாற்றிற்கும் இது போன்ற அவமானம்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மற்றொரு பயனர், “இந்த பயங்கரமான புடவையை அங்கீகரித்த தருண் தஹிலியானி மற்றும் ஜவுளி அமைச்சக அதிகாரி ஆகியோர் தேசத்துரோகத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும்! என்ன வீணான வாய்ப்பு!” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.