அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் : மார்ச் 22 வரை வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொடரலாம் ஆனால்  மார்ச் 22 வரை முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொடரலாம் ஆனால்  மார்ச் 22 வரை முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை
ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி
பழனிச்சாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து
ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி
நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் இன்று காலை 10
மணியளவில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், விஜய்நாராயண் ஆகியோர் ஆஜராகினர். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் , மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி. எஸ்.ராமன், ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகினர்.

தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச் செயலாளராக யாரையும் அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே கடிதங்கள் அனுப்புகிறது ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஒன்றரை கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓபிஎஸ்க்கு 1.50 கோடி உறுப்பினர்களில் 1 சதவீதம் கூட ஆதரவில்லை. உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது தேர்தல் நடைமுறை துவங்கி விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது.தேர்தல் நடைமுறை முடிவடைய வேண்டும். வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமையில்லை. அவர்கள் மறைமுக மனுதாரர்களாக உள்ளனர். பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை என அதிமுக வின் இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏற்கனவே இது தொடர்பான வழக்கு மார்ச் 17 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு  விசாரணை நடந்து ஏப்ரல் 11 ஒத்திவைக்கப்பட்ட பின்  பொது செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசியம்? என்றும்  ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவசர வழக்காக ஏன் பதிவு செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.

தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் ஆனால் முடிவுகள் வெளியிட கூடாது என்றும் மார்ச் 22 விசாரணை நடைபெறும் என்றும்  மார்ச் 24 அன்று இது தொடர்பாக  உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.