ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பெண்கள் உயர்கல்வி பயில்வதற்கும், வேலைக்கு செல்வதற்கும், பூங்கா, ஜிம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதற்கும் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் கடந்த வாரம் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக, கல்லூரி பயின்று வரும் ஆண் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர். பெண்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான தடையை நீக்கும்வரை, வகுப்புகளை புறக்கணிக்கப் போவதாக ஆப்கானிஸ்தான் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
”எங்களது சகோதரிகளை பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கின்றன. அதனால் நாங்கள் பல்கலைக்கழகங்களையும், பாடங்களையும் புறக்கணிக்கிறோம்” என்று அம்மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், பெண்களை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.







