முதலமைச்சரின் தகவல் பலகை திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வருவாய், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் குறித்தும் முதலமைச்சரின் உத்தரவு குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.
நிகழ்நேர தகவல், முறையான கண்காணிப்பு, அரசின் செயல்திறன் அதிகரிப்பு, தாமதத்தை குறைத்தல் மற்றும் உடனடி முடிவெடுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் முதலமைச்சரின் தகவல் பலகை. காய்கறி விலை முதல் பொருளாதார நிலை வரையிலான தகவல்களுடன் அரசின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையிலான இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, உள்துறை, போக்குவரத்துத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். வருவாய்த் துறையால் வழங்கப்படும் சாதி, இருப்பிட, வருவாய் உள்ளிட்ட சான்றிதழ்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்த முதலமைச்சர், நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் அடுத்த ஒரு மாதத்திற்குள் தாமதமின்றி வழங்க அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
தஞ்சாவூர், கோவை , மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டா மாறுதல்களை எவ்வித சிரமமுமின்றி வழங்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், போதுமான பேருந்துகளை இயக்குவது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் சுமார் 2 மணி நேரம் ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் தகவல் பலகை திட்டம் தொடங்கிய ஓராண்டில் அரசின் திட்டங்கள் மக்களை தேடி சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக மக்கள் பயன்பெறும் திட்டம் என்பதாலும், முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் திட்டம் என்பதாலும் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
– விக்னேஷ், முதன்மை செய்தியாளர், நியூஸ்7 தமிழ்.







