அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை அக்.30-ம் தேதி நடைபெற உள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கேட்பதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : கூட்டணிக்கு இபிஎஸ் அழைத்தார்… நாங்கள் ஏற்கவில்லை…! – சீமான் பரபரப்பு பேட்டி
இதையடுத்து, உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக நாளையே விசாரிக்க வேண்டும் என நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன்பு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி கவுல், ‘ஏன் இவ்வளவு அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் தான் உடனடியாக அணுகியுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு, வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதி எஸ்.கே.கவுல் அறிவித்தார்.







