தமிழ்நாட்டில் BA4, BA5 வகை கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 4 பேருக்கு BA4 தொற்றும், 8 பேருக்கு BA5 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

தமிழ்நாட்டில் 4 பேருக்கு BA4 தொற்றும், 8 பேருக்கு BA5 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது. வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டன. இதில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருக்கு BA 4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஆகும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக இப்போது தான் தொற்று BA5 வகை உறுதி செய்யப்பட்டு உள்ளது. தெலங்கானா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்புக்குள்ளான 12 பேரும் குணமடைந்து விட்டனர். கொரோனா நோயாளிகள் 790 பேரில் 46 பேர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். அதே போல 1.21 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள 26,52,000 தகுதி உள்ள நிலையில் 12,24,000 நபர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் மிகவும் குறைவாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 100 க்கும் மேலாக தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவும் வண்ணம் உள்ளதால் அவற்றை கண்காணிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அடுத்த அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நாம் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று கூறினார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்பட்டு வருகிறது. மிக மிக குறைவான விலையில் தான் மருந்துகள் பொருட்கள் வாங்குகிறார்கள். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் தகவல் கேட்கப்படும். இந்த ஆண்டுக்கான டெண்டர் முடிந்ததா என்று தெரியவில்லை. அதை உறுதி செய்து விட்டு பதில் கூறுகிறேன். குழந்தைகளுக்கான உணவையும் தாய்மார்களின் உணவையும் மாற்றி ஒப்பிடக் கூடாது எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.