மதுரையில் நகை கடையில் நகை வாங்குவது போன்று சென்ற பெண் ஒருவர், ஊழியர் அசந்த நேரம் பார்த்து 5 பவுன் எடை கொண்ட இரண்டு தங்க சங்கிலியை தூக்கி கொண்டு தப்பி ஓடினார். இதன் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகை கடையில் பணியாற்றி வருகிறார். இவரது கடைக்கு பெண் ஒருவர் வந்துள்ளார். தனக்கு நகை வாங்க வேண்டும் என்று அனைத்து நகைகளையும் பார்த்துள்ளார். கோபியும் ஒவ்வொரு நகையையும் அந்த பெண்ணுக்கு காட்டியுள்ளார்.
அப்போது, வேறு நகை எடுப்பதற்காக கோபி திரும்பிய போது, அந்த பெண் 5 பவுன் எடை கொண்ட இரண்டு தங்க சங்கிலியை எடுத்து கொண்டு கடையில் இருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் கோபி திரும்பி பார்த்த போது, அந்த பெண் கடையில் இல்லை. உடனே நகைகளை சரி பார்த்தபோது, அதில் இரண்டு தங்க சங்கிலி மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து விளக்குதூண் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சியில் அந்த பெண் கடைக்குள்ளே செல்வதும், பின்னர் சிறிது நேரத்தில் நகையை எடுத்து கொண்டு தப்பி ஓடியதும் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.








