தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையராக இருந்த டிஜிபி ரவி சில நாட்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனராக உள்ள அமல்ராஜை தாம்பரம் காவல் ஆணையராக நியமித்து உள்துறை கூடுதல் செயலாளர் பிரபாகரன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமல்ராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் திருச்சியில் பட்டப்படிப்பை முடித்தார். 1996ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் ஆன பின் எம்பிஏ, மற்றும் டாக்டர் பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அமல்ராஜ் ஏ.எஸ்.பி.யாக திருப்பூரில் பணியாற்றினார். அதன் பின் மதுரை காவல் துணை ஆணையர் ஆனார்.
தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். டிஐஜியாக ராமநாதபுரம், திருச்சி, சேலத்தில் பணியாற்றினார். ஐஜியாக பதவி உயர்வு பெற்ற பின் சேலத்தின் காவல் ஆணையராக பணியாற்றினார். அதன் பின் கோவை, திருச்சி மாநகரங்களுக்கு காவல் ஆணையராக பணியாற்றியவர். அதுமட்டுமல்லாமல் மத்திய மற்றும் மேற்கு மண்டலத்திற்கு ஐ.ஜியாக பணியாற்றி உள்ளார்.
ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற பின் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனர் பொறுப்பேற்றார். சேலம் மற்றும் கோவையில் கமிஷனராக இருந்த போது சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்தினார். இதனால் 40 சதவீதம் குற்றங்கள் அந்த நகரங்களில் குறைந்தது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வாங்கியவர்.
கோவை மற்றும் சென்னையில் காவல் அருங்காட்சியகத்தை அமல்ராஜ் அறிவுரையின் படி ஏற்படுத்தப்பட்டது. சிறப்பாக பணியாற்றியமைக்காக குடியரசுத் தலைவர் பதக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் காவல் துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள், வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள், வெல்ல நினைத்தால் வெல்லலாம், சிறகுகள் விரித்திடு, போராடக் கற்றுக்கொள் உள்ளிட்ட 5 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.







