அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலை முதல் சூரியசக்தி நகரமாக மாற்றுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
உத்திரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி பூஜை கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கோயில் 110 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த கோயிலைக் கட்ட ரூ.1000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலையை செய்வதற்கு தேவையான இரு அரியவகை கற்கள் நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு, செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் மூன்று மாடி ராமர் கோயிலின் தரை தளம் கட்டும் பணி டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என்றும், குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுத்தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் லட்சியத் திட்டமான ‘சூரிய சக்தி ஆற்றல் கொள்கை 2022’-யில் நொய்டா மற்றும் 16 நகராட்சிகளை சூரிய சக்தி நகரங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை மாநிலத்தின் முதல் சூரிய சக்தி நகரமாக மாற்றுவதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதுகுறித்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: சூரிய சக்தி நகரத் திட்டத்தில் முக்கிய வசதியாக ‘என்டிபிசி க்ரீன்’ நிறுவனத்தால் சரயூ நதிக்கரையில் நிறுவப்பட உள்ள 40 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 10 மெகாவாட் மின் உற்பத்தி ஜனவரி மாதத்துக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – மீட்பு பணி தீவிரம்..
கோயிலுக்குச் செல்லும் முக்கிய சாலையான 12.9 கி.மீ. தொலைவு ‘ராமர் பாதையில்’ சூரிய சக்தியால் இயங்கும் 134 தெருவிளக்குகள் தற்போதுவரை நிறுவப்பட்டுள்ளன. மேலும் 276 தெருவிளக்குகள் விரைவில் நிறுவப்படும். இது தவிர நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 150 சூரிய சக்தி உயர் மின்விளக்குகளும், மற்ற இடங்களில் 800 சூரிய சக்தி தெருவிளக்குகளும் நிறுவப்பட உள்ளன.
வயதான பக்தா்களின் வசதிக்காக 5 பிரத்யேக மின்-வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சரயூ ஆற்றில் பக்தா்கள் பயணம் மேற்கொள்ள 30 போ் அமரக்கூடிய வகையில் 2 சூரிய சக்தியில் இயங்கும் படகுகளை மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்க உள்ளது.
அதேபோல் 1 கிலோவாட் திறன் கொண்ட 40 சூரிய சக்தி மரங்களும், 2.5 கிலோவாட் திறன் கொண்ட 18 மரங்களும் நகரின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டு வருகின்றன. எல்இடி விளக்குகளால் ஒளிரும் இந்த மரங்கள், கிளை போன்ற அமைப்புகளில் சூரிய மின் ஆற்றலைப் பெறுவதற்கான தகடுகளைக் கொண்டிருக்கும். இதனால், மின் ஆற்றல் பெறுவதற்கான வழிமுறையுடன் அப்பகுதியில் நிழலும் கிடைக்கும்.
சிறிய குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் இருக்கைகள் அந்த நிழற்பகுதியில் அமைக்கப்படும். திட்டமிடப்பட்ட 10 குடிநீா் வழங்கும் இயந்திரங்களில் 4 ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்டன. மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் 2 சார்ஜிங் நிலையங்கள், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்காக, 6 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்பட உள்ளது.







