முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சினிமா

ஒரு பெண்ணின் பார்வையில் ‘அயலி’

இன்று வெளியாகியுள்ள ’அயலி’ எனும் வெப்தொடர், ஒரு பெண்ணின் பார்வையில் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

பொதுவாக பெண்கள் பல கஷ்டங்களை தாண்டி தான் ஒரு இடத்தில் சாதனையாளராக வர முடிகிறது. இப்படியாக எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும் அதை போராடி சாதித்து வெளிவரும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் விழுந்த அடிகளை பெரிதாக பேசுவது இல்லை. அப்படி பேச வேண்டுமென்றால், சந்தர்ப்பம் கிடைக்கும் இடத்தில் வேறு வழி இல்லாமல் தாங்கள் கடந்து வந்த பாதைகளை சொல்வதுண்டு. இல்லையென்றால் படங்களை பார்க்கும் போது நினைவுக்கு வரும். அப்படி பெண்களின் போராட்டக் காலங்களை நினைவு கூறும் ஒரு அருமையான இணைய தொடர்கதைதான் அயலி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முத்துக்குமார் எழுதி இயக்கி Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள தொடர் கதை தான் அயலி. இதில், அபி நட்சத்திரா, அனுமொழி என நிறைய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை என்னவென்றால், ஒரு பெண் பருவமடைந்துவிட்டால் உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த கிராமத்தில் வணங்கக்கூடிய அயலி என்ற தெய்வத்திற்கு ஆகாது என்பது ஊர் மக்களின் வழக்கம். இப்படி இருக்கையில் அந்த கிராமத்தில் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பெண்கள் தாண்ட மாட்டார்கள். ஆண்கள் பத்தாம் வகுப்பு எழுதினாலும் தேர்ச்சி பெற மாட்டார்கள். இப்படி இருக்கும் சூழலில், அந்த ஊரில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்துக்கு செல்ல ஆர்வம் இருக்கும். ஆனால் வயதுக்கு வந்து விடுவோமோ என்ற பயம் எல்லா பெண் குழந்தைகளுக்கும் இருக்கும். பருவம் முற்றிவிட்டால் பெண் குழந்தைகளுக்கு ஒரு மாதம் அம்மாக்களின் ட்ரெயினிங். அந்த ட்ரைனிங் எப்படி இருக்கும் என்றால் அம்மியில் மிளகாவை அரைத்து உடலில் தடவிக் கொண்டால் எப்படி இருக்கும். தலை முதல் கால் வரை எரிச்சலாக இருக்கும் அல்லவா. அது போன்றது தான் அந்த ட்ரைனிங்கும். வேலை செய்து வேலை செய்து வலி பின்னிவிடும்.

இப்படி பருவமடைந்து விட்டேன் என்று சொன்னால் படிக்க விடாமல் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் தன் பருவம் முற்றியதை மறைக்கிறாள் தமிழ்ச்செல்வியாக நடித்த அபி நட்சத்திரா. அதுமட்டுமின்றி தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசைகளும் வளர்கிறது. இப்படியாக இருக்க ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பொண்ணு ஏன் இன்னும் பருவம் அடையவில்லை என்று. எதையும் கண்டு கொள்ளாமல் ஊர் மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளையும் உடைக்க போராடுகிறாள் தமிழ்ச்செல்வி. அத்துடன் தனது இலக்கையும் நோக்கி ஓடுகிறாள்.

தனது கிராமத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவியாக விளங்குகிறார் தமிழ்ச்செல்வி. தமிழ்செல்விக்கு ஒரு ஆசை உண்டு தனது கிராமத்தில் உள்ள பெண்களுக்கும் சுதந்திரம் வாங்கி தர வேண்டும் என்று. அதனால் பல இடங்களில் துணிந்து செயல்படுகிறார். ஊர் மக்களின் எதிர்மறையான கருத்துக்களுக்கு ஆப்பு வைக்கிறார். கடைசியில் கிராமத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு சுதந்திரம், கிராமத்தின் வளர்ச்சி இது அனைத்தையும் செய்து காட்டுகிறாரா என்பதுதான் தொடர்கதையின் மொத்த கதை.

முதலாவதாக இப்படைத்தை எடுத்த இயக்குநர் முத்துக்குமாருக்கு எனது பாராட்டுக்கள். ஒரு பெண்ணாக நான் இந்த படத்தை பார்க்கும் போது சில இடங்களில் என்னை கண்கலங்க வைத்தது. தமிழ்ச்செல்வி போல் உள்ள சூழ்லையில் நான் இல்லை என்றாலும், எனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சமாளித்து போராடி தடைகளைத் தவிர்த்து வரும் பெண்ணாக என்னை எண்ணும்போது அங்கு நானும் அயலியாக தான் தெரிந்தேன். நல்லவேளை இப்படத்தை இயக்குநர் இரண்டு மணி நேர படமாக எடுக்காமல் தொடர்கதையாக வெளியிட்டார். 15 வயது முதல் 25 வயது வரை, பெண்கள் அனுபவிக்கக் கூடிய பிரச்னைகளை கூறுவதற்கு இரண்டு மணி நேரம் போதாது என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக மற்ற படங்களில் பெண்கள் கொடுமையான துயரங்கள் அடைந்தால் உடலை மாய்த்துக் கொள்வது போன்ற காட்சிகள் வெளிவரும். ஆனால் இப்படத்தில் ஒரு பெண்களை கூட அப்படி காட்டவில்லை. நிஜ வாழ்க்கையில் பார்த்தால் உண்மையிலே கடும் துயரங்களில் அவதிப்பட்ட பெண்கள் எப்படி அந்த சூழ்நிலையில் இருந்து மீள்வது என்று தான் பார்ப்பார்கள். அதை அற்புதமாக கதையில் காண்பித்திருக்கிறார்.

அயலி என்ற படம் ஒவ்வொரு காட்சிகளையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மூடநம்பிக்கைகளை கடுமையாக விமர்சித்து சாடும் படமாக உள்ளது. ஆத்தா சொல்லுது ஆத்தா சொல்லுது அந்த ஆத்தா யார்ட்ட தான் சொல்லுது. அப்படி சொல்லுச்சுன்னா, ஏன் என்கிட்ட வந்து சொல்லல. இப்படி உள்ள கேள்விகள் சிந்திக்க வைக்கிறது. நான் ஆம்பள அப்படி இப்படித்தான் இருப்பேன், நீ பொம்பள இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களுக்கு முடிவுகட்டக்கூடிய படம் அயலி. இத்தொடரை பெண்கள் பார்க்க வேண்டும் என்று சொல்வதற்கு முன் ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தான் சொல்வேன்.

– சுஷ்மா சுரேஷ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனுஷ் படத்தில் இணைந்த பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்

Gayathri Venkatesan

கோலிவுட்டின் கிரீடம் விஜய் கதை

Arivazhagan Chinnasamy

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா; உதவிக்கரம் நீட்டிய சுந்தர் பிச்சை!

EZHILARASAN D