3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் பிரபல ஐடி நிறுவனம்

ஜெர்மனை சேர்ந்த பிரபல ஐடி நிறுவனமான எஸ்ஏபி (சேப்) நிறுவனம் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார…

ஜெர்மனை சேர்ந்த பிரபல ஐடி நிறுவனமான எஸ்ஏபி (சேப்) நிறுவனம் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார அறிஞர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை சமீபத்தில் அறிவித்தது. அமேசான் நிறுவனம் 18,000  ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் 5% சதவீத ஊழியர்களை அதாவது 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் 12,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. கடந்த சில தினங்களுக்கு முன் மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாடிபை நிறுவனம் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், சர்வதேச அளவில் மிகப் பெரிய ஐடி நிறுவனமான எஸ்ஏபி (சேப்) நிறுவனம் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த நிறுவனத்தில் மொத்தம் 1,20,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 3,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோக உள்ளது.

இந்த பணிநீக்க திட்டம் குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கத்தை திட்டமிட்டுள்ளோம். மேலும், நிறுவனத்தின் அடிப்படை தொழில்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மறுசீரமைப்பு மூலம் 300 முதல் 350 மில்லியன் யூரோக்களை வரும் ஆண்டில் சேமிக்க முடியும். இதை நிறுவனத்தின் முதலீட்டு நடவடிக்கைக்கு பயன்படுத்த முடியும்” என்று கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.