ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேவேளையில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவின் பெயர் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெறவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் போட்டியிட கே.எஸ்.தென்னரசு விருப்பமனுவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பணிக்குழு பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார். நாளை நண்பகலுக்குள் அதிமுக பொறுப்பாளர்கள் அனைவரும் ஈரோட்டில் இருக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







