உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலிய அணி. இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தியது.
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற (16.10.2023) 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா – குசல் பெரேரா களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்து மாஸ் அடித்தளம் அமைத்து கொடுத்தனர். நிசங்கா 61 ரன்கள் எடுத்திருந்த போதும் பெரேரா 78 ரன்கள் எடுத்த போதும் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
இவர்களை அடுத்து சேரித் அத்லங்கா மட்டுமே போராடி 25 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தால், இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான டேவிட் வாரனர் 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ச் 52 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய லபுஷேன் நிதானமாக ஆடி 40 ரன்களை குவித்தார். பிறகு களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் சிறப்பாக ஆடி 58 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய கிளென் மேக்ஸ்வெல் வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்களில் 215 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டி முடிவில் மேக்ஸ்வெல் 31 ரன்களுடனும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது.







