காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இவருக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இவருக்கு பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “மிகச்சிறந்த சாதனை படைத்திருக்கிறீர்கள் சிந்து. வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். டேவிட் வார்னரின் மனைவி கேன்டிஸும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளீர்கள் சிந்து என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சிந்து, காமன்வெல்த் போட்டியில் கடந்த 2018ம் ஆண்டில் கலப்பு பிரிவில் தங்கம் வென்றார். முதல் முறையாக ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இவர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கனடா வீராங்கனை மிச்செல் லியை எதிர்கொண்டார் சிந்து. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீராங்கனை மிச்செல் லியை வீழ்த்தி சாம்பியன் ஆனார் சிந்து.








