“கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக நினைக்கிறேன்”- விருமன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ராஜு முருகன்.
கார்த்தி நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள “விருமன்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இதில் கார்த்தி, அதிதி சங்கர், இயக்குநர் முத்தையா, ராஜ்கிரண், சூரி, கருணாஸ், ரோபோ சங்கர், சிங்கம்புலி, சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, ஆர்.கே.சுரேஷ் என படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டு படத்தில் பணியாற்றிய தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர்ராஜு முருகன் நான் கார்த்தி அவர்களிடம் கதைக் கூறவே சென்றேன், ஆனால் அவர் கதையைக் கேட்டுவிட்டு “விருமன்”படத்திற்குப் பாடல் எழுதித் தருமாறு கேட்டார். ஏற்கனவே நான் அவர் நடித்த “தீரன்” படத்திற்கு ஒரு பாடல் எழுதியுள்ளேன்.
நான் இந்தப்படத்திற்குப் பாடல் எழுதியதை ஒரு பெருமைமிகு தருணமாகக் கருதுகிறேன். ஏனெனில், நான் எழுதிய பாடல் ஒன்றை “இளையராஜா” அவர்கள் பாடியுள்ளார். ராஜா சார் அவர்களை எனது வரிகளை உச்சரிக்கச் செய்து அந்த பெருமையை எனக்குத் தேடித் தந்த கார்த்தி அவர்களுக்கும் இயக்குநர் முத்தையா அவர்களுக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கும் இந்த தருணத்தில் நான் நன்றி கூறுகிறேன்.
தனக்கு தெரிந்த எளிமையான ஒரு வாழ்கையைத் தொடர்ந்து தன் படங்களில் பதிவு செய்து வருகிறார் இயக்குநர் முத்தையா. அவர் படத்தில் இருக்கும் சிறு சிறு எமோஷன்ஸ் தொடர்ந்து மக்களிடம் சென்று சேருகிறது என்று நம்புகிறேன். இதுபோன்ற உங்கள் இயல்புக்குரிய கதைகளைத் தொடர்ந்து படமாக்குங்கள். கார்த்தியின் அடுத்த படத்தை நான் தான் இயக்க இருக்கின்றேன். அந்தப் படம் எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும். ஏனெனில் நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்.
கார்த்தி சமுதாயத்திற்கும் தேவையான பல விஷயங்களை அவர் முன்னெடுத்து வருகிறார். அப்படி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.” என்று கூறினார்.
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் தற்போது நடிகர் கார்த்தியுடன் முதன் முறையாக இணைவது, திரை ரசிகர்களிடம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







