கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் மீது சமூக விரோத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தாக்குதல் கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே, இதுகுறித்து தீர விசாரித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளங்கண்டு பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்து, வழக்கு தொடுத்திட வேண்டும்.
தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டும். ஊடகத் துறையினர் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசை வலியுறுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா