“ஆபத்தான குப்பை எரிஉலை திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும்” – அன்புமணி!

தமிழகத்தின் 26,883 நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்று உலக சுற்றுச்சூழல் நாள்! உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில் கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படுகிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் #NowForClimate என்பதை இவ்வாண்டின் முழக்கமாக ஐநா அவை முன்வைத்துள்ளது.

காலநிலையில் மாற்றத்தின் காரணமாக அளவுக்கதிக மழை, பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன! இயற்கை பேரிடர்கள் இனிவரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும். இதனை எதிர்கொள்ள போர்க்கால வேகத்தில் தமிழ்நாடு அரசு தகவமைப்பு (Adaptation) நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் ஒரு அங்கமாக, சென்னை பெருநகருக்காக ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுபாடு தடுப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சி, நீடித்திருக்கும் போக்குவரத்து என அனைத்திலும் தமிழ்நாடு முழுமை அடைய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும். அதன் ஒரு இன்றியமையாத பகுதியாக தமிழ்நாட்டின் சதுப்புநிலங்கள் அனைத்தையும் பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் படி, இஸ்ரோ SAC Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழகத்தின் 26,883 நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும்.

சென்னை கொடுங்கையூர், பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திட்டமிடப்பட்டுள்ள மிக ஆபத்தான குப்பை எரிஉலை திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இந்த சுற்றுச்சூழல் நாளில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.