வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு,காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் இன்னும் மழைநீர் வடியவில்லை.
இதனை வெளியேற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. இந்தநிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், சென்னை கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, அடையார், கோட்டூர்புரத்தில் கனமழை பெய்துவருகிறது. அதேபோல, சென்னை ஓட்டேரி, புளியந்தோப்பு மற்றும் சென்ட்ரல் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னை பெரம்பூர், திரு.வி.க நகர், வியாசர்பாடி, முல்லை நகர், எம்.கே.பி நகர், மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அதேபோல, சென்னை அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் கரு மேகமூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்து ஒரு மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








