தமிழ்நாட்டில் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வரும் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

தமிழ்நாட்டில் வரும் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 தினங்களில் மழையின் தீவிரம் குறையும் எனவும், அதன் பின்னர் மீண்டும் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.