ஷார்ட் பிட்ச் பந்துகளில் சிறப்பாக ஆடுவது எனது பலமாக நினைக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. டி-20 தொடரில், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி-20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா, 31 பந்துகளில் 56 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களும் தீபக் சாஹர் 21 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சன்ட்னர் 3விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களத்தில் இறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்கார் மார்டின் கப்தில் மட்டும் அதிரடியாக ஆடி 51 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில், அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகம் விருதை அக்ஷர் படேலும் தொடர் நாயகன் விருதை ரோகித் சர்மாவும் பெற்றனர்.
பின்னர் ரோகித் சர்மா கூறும்போது, ‘தொடக்கம் நன்றாக அமைய வேண்டும் என்று எப்போதுமே நினைப்பவன். ஆடுகளத்தின் தன்மை, நிலைமையை பார்த்து கணித்தவுடன் ஒரு பேட்ஸ்மேனாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அதன்படி ஆடுகிறேன். மிடில் ஆர்டரில் வீரர்கள் இன்னும் சிறப்பாக ஆடவேண்டும் . ஆனால், கடைசிகட்டத்தில் ஹர்ஷல், தீபக் சாஹர் சிறப்பாக ஆடினார்கள். ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஆடுவது பற்றி கேட்கிறார்கள். சிறுவயதிலேயே அப்படி ஆடப் பழகிகொண்டேன். அந்த பந்துகளில் சிலமுறை ஆட்டமிழக்கவும் செய்திருக்கிறேன். அதைப் பற்றி கவலைப்படாமல் ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஆடிவருகிறேன். அதில் சிறப்பாக ஆடுவது எனது திறமைகளில் ஒன்றாக கருதுகிறேன்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.









