சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை வேளச்சேரி – விஜயநகரம் சந்திப்பில், தரமணி மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் இரண்டடுக்கு மேம்பாலம் 67 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வரும் வேளச்சேரி பாலப்பணிகளில் ஒரு பகுதி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சென்னையின் முதல் இரண்டடுக்கு மேம்பாலமான வேளச்சேரி பாலத்தின் ஒரு பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 93 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பால பணிகள், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தற்போது புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனால் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதலை போரில் தமிழகம் என்ற நகரும் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளையொட்டி திறக்கப்பட்டுள்ள கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்களின் அரியவகை புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, வேளச்சேரியில் இருந்து கோயம்பேடு செல்லும்போது, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிவிட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கோயம்பேடு செல்லும்போது அவசரமாக வந்த ஆம்புலன்சுக்கு முதலமைச்சரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையோரம் ஒதுங்கிநின்று வழிவிட்டன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Tamil Nadu Chief Minister MK Stalin's convoy gives way to ambulance while enroute to Koyambedu from Velachery today. pic.twitter.com/IK03SkhyoK
— ANI (@ANI) November 1, 2021