7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் முதலமைச்சர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இபிஎஸ் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
”தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22,273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7,174 மெட்ரிக் டன் அரவைக்கு அனுப்பியது போக 15,099 மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ளது. இதிலிருந்து தான் 7,000 டன் இருப்பில் இல்லை என்று இரு தரப்பினர் முரணாகக் கூறுவதாகக் கேள்விக்குறியுடன் செய்தி வந்ததைப் பார்த்தேன். உடனே தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவரையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குரையும் அந்தக் கிடங்கில் 100% தணிக்கை செய்து உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்திட ஆணையிட்டுள்ளேன்.
இதையும் படியுங்கள் : ஜூன் 12ல் தொடங்குகிறது டிஎன்பிஎல் – டிஆர்எஸ், இம்பேக்ட் பிளேயர் முறைகள் அறிமுகம்!!
அதற்குள் அவசரப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை உண்மையிலேயே ஈர்த்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்கிறாரே என்று பொறாமையின் உச்சகட்டத்தில் பத்திரிக்கையில் வந்த செய்தியை ஆராயாமல் வசவுகளை அள்ளித் தெளிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது”.
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







