ஐபிஎல் போட்டிகளை போல், டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரிலும், டி.ஆர்.எஸ் முறை மற்றும் இம்பேக்ட் பிளேயர் முறை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக்
போட்டி தொடர் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் டி.என்.பி.எல் சேர்மன் ஆனந்த், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் ஆர்.என்.பாபா, கிரிக்கெட் வீரர் ஷாரூக்கான் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “தமிழ்நாடு பிரிமியர் லீக் 7-வது சீசன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.
குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சேலம் மாவட்டத்திலும், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி திருநெல்வேலியிலும் நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எல்.இ.டி விளக்குகளை சீர்ப்படுத்தும் பணிகள் நடைபெற இருப்பதால், இந்தாண்டு டி.என்.பி.எல் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படவில்லை.
டி.என்.பி.எல் போட்டியில் முதல் பரிசு ரூ.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம்,
மூன்று மற்றும் நான்காம் பரிசு ரூ.20 லட்சம் என மொத்த பரிசுத்தொகை ரூ.1.7 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தாண்டு நடைபெறும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில், சர்வதேச போட்டிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த டி.ஆர்.எஸ் (DRS) தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட உள்ளது.
இதையும் படியுங்கள் : நதிகளுக்குச் செல்லும் பதக்கங்கள்… – முகமது அலியை பின்பற்றும் மல்யுத்த வீராங்கனைகள்??
அதேபோல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட
இம்பேக்ட் பிளேயர் (Impact player) முறையும் டிஎன்பிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் மகளிர் டி.என்.பி.எல் கிரிகெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.







