கோவையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்திலிருந்து, 23 ஆயிரமாக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவை, ஈரோடு, தஞ்சாவூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாகவே காணப்பட்டது.
இந்நிலையில், கோவையில் தினசரி பாதிப்பு மூன்று ஆயிரத்திலிருந்து இரண்டு ஆயிரத்து 600ஆக குறைந்துள்ளது. கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர். கடந்த வாரங்களில் 27 ஆயிரம் பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 251 ஆக உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.







