கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை கவச உடை அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாநில அளவில் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு, கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கை வசதிகளைப் பார்வையிட்டார்.
பின்னர் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதியைத் திறந்து வைத்த அவர், கார் ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து கோவை சென்ற அவர், மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பாதுகாப்பு உடை அணிந்து மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டார். மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.