ஐதராபாத்தில் நேரு உயிரியல் பூங்காவில் இருந்த 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 8 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக தலைமை அதிகாரி கூறுகையில், கடந்த 1 வாரத்திற்கு முன்னரே, சிங்கங்களிடம் சில அறிகுறிகளை கண்டோம். அதையடுத்து, அந்த சிங்கங்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிங்கங்களை தனிமைப்படுத்தியதாகவும், மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், விலங்குகளை பராமரித்தவர்களிடமிருந்து கொரோனா தொற்று விலங்குகளுக்கு பரவியிருக்கலாம் என தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலை தடுக்க உயிரியல் பூங்காவில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் எடுத்துள்ளாதாக தெரிவித்தார்.







