சென்னை பள்ளிக்கரணையில் பலாத்கர வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளரை, நான்கு மாத தேடலுக்கு பிறகு கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை புனித தோமையார்மலை ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் 56 வயதான ஆண்ட்ரூஸ் கார்ட்வேல் என்பவர்.இவர் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த சமூக சேவரான 37 வயதான உதவி செய்வதாக ஏமாற்றி பாலியல் அத்துமீறல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவரிடம் ஏமாற்றம் அடைந்த கோவிலம்பாக்கத்தைச்சேர்ந்த அந்த பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கார்ட்வேல் மீது ஒரு நிகழ்ச்சியில் அவரை சந்தித்ததாகவும், அதே சமயத்தில் தனது தாயார் இறந்த மன அழுத்தத்தில் இருந்ததால், ஆண்ட்ரூஸ் ஆறுதலாக பேசி தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தனது வயதைக் குறைத்துக் காட்டி இளைஞர்போல் நாடகமாடி தன்னை ஏமாற்றி கோவிலம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் அவர் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இதனையடுத்து அப்பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் ஆண்ட்ரூஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு காவல்நிலையம் வந்த ஆண்ட்ரூசை மறு விசாரணைக்கு வந்து ஆஜராக அறிவுறுத்தி அனுப்பி வைத்ததை தொடர்ந்து, அவர் தலைமறைவானார்.
அதன் பின்னர் புகார் அளித்த பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதோடு, அப்பெண்ணை கார் ஏற்றி கொலை முயற்சி செய்ததாக மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து முன் ஜாமின் பெற்றுக்கொண்ட ஆண்ட்ரூஸ் , தொடர்ந்து அப்பெண்ணை மிரட்டி வருவதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இதனைத்தொடர்ந்து ஆண்ட்ருசால் பாதிக்கப்பட்ட அப்பெண் உச்சநீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்து, அதில் ஆண்ட்ரூசின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய கேட்டுக்கொண்டார்.
இதன்பிறகு ஆண்ட்ரூசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களை சந்தித்து தலைமறைவாக இருந்த ஆண்ட்ரூசை கைது செய்யுமாறு புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
இதனையடுத்து தனிப்படையை அமைத்து கொல்கத்தாவில் பதுங்கி இருந்த ஆண்ட்ரூசை நான்கு மாத போராட்டத்திற்கு பிறகு தனிப்படை போலீசார் கைது செய்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









