தன் ஆர்வல தொண்டு நிறுவனங்கள், NGO வைத்து சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை
தாக்கல் செய்திருந்தார்.
அதில், “.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தில் பெரும்பாலான மக்கள்
விவசாயத்தை நம்பியே இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆலங்குளம் கிராமத்திற்கு அருகே தொட்டியன்குளம் கண்மாய் அமைந்துள்ளது சுமார் 88 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த குளத்தில் இருக்கும் நீரினை நம்பியே சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய
கிராமம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் குளத்தின் சரியாக தூர்வாராத காரணத்தினால் அங்கு சீமை கருவேல மரங்கள் அதிகமாக சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் இல்லாமல் நிலங்கள் வறண்டு காணப்படுகிறது.
தொட்டியம்குளம் கண்மாயில் தற்போது கழிவுநீர் உட்பட கழிவுப் பொருட்களும் கலந்து
வருகின்றனர். எனவே, தென்காசி, ஆலங்குளம் கிராமத்திலுள்ள தொட்டியங்குளம் கண்மாயை முறையாக தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு
வந்தது. அரசு தரப்பில், தென்காசி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக டெண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் தெரிவித்தது:
தன் ஆர்வல தொண்டு நிறுவனங்கள், NGO வைத்து சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். தென்காசி, ஆலங்குளம், தொட்டியங்குளம் கண்மாயிலுள்ள சீம கருவேல மரங்களை அகற்றுவது மட்டுமல்லாமல் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள சீம கருவேலம் மரங்களை அகற்ற NGO, தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
அத்துடன், சீமை கருவேல மரங்கள் அகற்றுவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணி துறைச் செயலாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 2:15 மணிக்கு ஒத்திவைத்தனர்.







