சென்னையில் இன்று ஆரம்பமாகும் ஆசிய ஆடவர் ஹாக்கி தொடர்; முதல் போட்டியில் தென் கொரியா, ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை ஈடுபடுகின்றன.
சென்னையில் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இன்று முதல் தொடங்கி, வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் ஆசிய ஆடவர் ஹாக்கி தொடருக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை, ஹாக்கி யூனிட் ஆப் இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியா, தென் கொரியா, மலேசிய, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் என 6 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன.
இன்று மாலை 4 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென் கொரியா 16 போட்டிகளில் வெற்றியும், ஜப்பான் 2 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமான 2 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது
அதனை தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு மலேஷியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. இதில் பாகிஸ்தான் 18 போட்டிகளிலும், மலேசியா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது.
தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டு விளையாடுகிறது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 7 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், சீனா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்காக டிக்கெட் விற்பனையானது, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள பாக்ஸ் கவுண்டர்களில் காலை 11 மணி முதல், மாலை 6 மணி வரை நடைபெறும். டிக்கெட்டுகள் விலையானது ரூபாய் 300 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.