மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கிப் புலி உயிரிழந்த நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை இறந்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுக்க பல பகுதிகளில் இருந்த சிவிங்கி புலிகள் வேட்டை காரணமாக முற்றிலுமாக அழிந்தேவிட்டது. அவை நாட்டில் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டன. இதனால் மீண்டும் சிவிங்கி புலிகளைக் கொண்டு வர இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன.
அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளும் (5 பெண், 3 ஆண்) மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளும் (7 ஆண், 5 பெண்) கொண்டுவரப்பட்டன. இந்த சிவிங்கிப் புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன.
இதில் 2 பெண் சிவிங்கிப் புலிகளும், 3 ஆண் சிவிங்கிப் புலிகளும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து உயிரிழந்தன. குனோ தேசியப் பூங்காவில் ஒரு பெண் சிவிங்கிப் புலி, 4 குட்டிகளை ஈன்றிருந்த நிலையில், அதில் 3 குட்டிகள் இறந்தன. இந்நிலையில், தாத்ரி என்ற பெண் சிவிங்கிப் புலி நேற்று காலையில் உயிரிழந்து கிடந்தது. இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய உடல்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில வனத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டுக்குள் 9 சிவிங்கிப் புலிகள் உயிரிழந்துவிட்டன. இது மத்திய அரசின் திட்டத்துக்கு பின்னடைவாக பாா்க்கப்படுகிறது. மீதமுள்ள 14 சிவிங்கிப் புலிகள் (7 ஆண், 6 பெண், ஒரு குட்டி) தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிவிங்கிப் புலிகளின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ‘ரேடியோ காலா்’ கண்காணிப்பு சாதனத்தால் ஏற்படும் புண்கள், சில சிவிங்கிப் புலிகளின் இறப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல், மோசமான பருவநிலையும் அவை உயிரிழக்கக் காரணம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.







