ஆசிய விளையாட்டு போட்டிகளின், பெண்களுக்கான கபடிப் போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகளில் ஆண்களுக்கான போட்டியில் 7 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்க உள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, சீன தைபே ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஈரான், பாகிஸ்தான், கொரியா குடியரசு, மலேசியா ஆகிய அணிகளும் உள்ளன. பெண்களுக்கான ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீன தைபே, தாய்லாந்து, கொரியா குடியரசு ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்கதேசம், நேபாளம், ஈரான் அணிகளும் உள்ளன.
அதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 32-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதன் தொடர்ச்சியில் தாய்லாந்தை 55-22 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. மேலும் அரையிறுதியில் இந்திய அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது.
ஆசிய விளையாட்டு தொடரில் 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.







