’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடைபயணம் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த செப்டம்பா் 28-ம் தேதி நடைப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீலாடி நபி ஊா்வலத்தையொட்டி அண்ணாமலையின் நடைபயணம் அக்டோபா் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதன் எதிரொலியாக பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. தேர்தல் தொடர்பான ஆலோசனைக்காக அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளதால் மேட்டுப்பாளையத்தில் 4-ம் தேதி நடைபெற இருந்த நடைபயணம் அக்டோபா் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நடைபயணம் தொடர்பான ட்விட்டர் (எக்ஸ்) பதிவில் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உடல்நலக்குறைவு காரணமாக அவரது ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பாஜக ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
https://twitter.com/BJP4TamilNadu/status/1709519524314452315?t=zcOd99AAGtEJRtbHhdYiCA&s=19
அந்த பதிவில், ”மாநில தலைவர் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ நடைபயணம் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.” இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.







