போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வழக்கில் கைதான ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
மத்திய அரசால் கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்ஹிம்பூர் பகுதியிலும் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது திடீரென ஒரு கார் அதிரடியாக பாய்ந்து அங்கிருந்த போராட்டக்காரர்கள் மீது ஏறியது.
இந்த சம்பவத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த விவசாயிகள், பத்திரிகையாளர்கள் என பலர் காயமடைந்தனர். மேலும் 8 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து வீடியோ ஆதாரங்களின் பெயரில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த லக்ஹிம்பூர் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஷுஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது அலகாபாத் நீதிமன்றம். தொடர்ந்து இன்று அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இது குறித்து பேசிய அவரது வழக்கறிஞர் அவதேஸ் சிங் பேசியதாவது, “நீதிமன்றம் ஆஷுஷ் மிஸ்ராவிற்கு விடுதலை கொடுக்கும் போது நகரத்தை விட்டு வெளியேற எந்தவித தடையையும் விதிக்கவில்லை” என்று கூறினார்.
இது தொடர்பாக பேசிய சம்யுக்த் கிசான் மோர்ச்சாவை சேர்ந்த விவசாய சங்கத்தினர், ஆஷுஷ் மிஸ்ராவுக்கு ஜாமீனில் விடுதலை வழங்கியுள்ளதை எதிர்த்து விரைவில் நீதிமன்றத்தில் மனு கொடுப்பதாக தெரிவித்தனர்.








