கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு வழக்கு – ஏப்.29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு வழக்கு ஏப்.29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21…

தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு வழக்கு ஏப்.29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  அவரது காவல் ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று வரை நீட்டிக்கப்பட்ட நிலையில்,  டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  கெஜ்ரிவால் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில்,  தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறையினர் கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீது நடந்த முதல் விசாரணையின் போது ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த ஏப். 9 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து கடந்த ஏப். 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு  மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா,  தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இந்த கைது நடவடிக்கை தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே நடத்தப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் முதலில் இந்த விவகாரத்தில் நோட்டீஸ் பிறப்பிக்கலாம் பிறகு உங்களது வாதங்களை கேட்கிறோம் எனத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதற்குப் பின் ஏப்ரல் 26ம் தேதிக்குள் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  வழக்கை ஏப்ரல் 29ம் தேதிக்கு முன்னதாகவே  விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை நிராகரிப்பட்டுள்ளது.  மேலும் தற்போது வழங்கியுள்ள விசாரணை தேதியே போதுமானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.