“பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன்?” – ப.சிதம்பரம் கேள்வி!

நாட்டில் உள்ள பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பாஜக அரசு,  மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சரும்,  காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்…

நாட்டில் உள்ள பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பாஜக அரசு,  மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சரும்,  காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  பின்னர்,  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.  இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.  இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஏப்.23 வரை பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில் நேற்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “மோடியின் கேரண்டி” என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்ற இந்த தேர்தல் அறிக்கைக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  அந்த வகையில்,  பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது :

“பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.  மக்களை ஏமாற்றும் வகையில் பல அறிவிப்புகளை பாஜக வெளியிட்டுளள்து.  இந்தியாவில் ஏறத்தாழ ஏழ்மை அகன்றுவிட்டது என நிதி அயோக் கூறுகிறது.  ஆனால் இந்தியாவில் இன்னும் ஏழ்மை இருக்கிறது என்பது தான் உண்மை.

மேலும்,  5 கோடி குடும்பம்தான் ஏழ்மையில் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  சாதிவாரி பொருளதார கணக்கெடுப்பு நடத்தினால் தான் ஏழ்மை குறித்த சரியான நிலவரம் தெரியவரும்.  குழாய் மூலமாக தண்ணீரே வராத நிலையில் எப்படி எரிவாயு வரும்.  இது மிகப்பெரிய வேடிக்கையாகும். எரிவாயு விலை அதிகமாக இருப்பதால்,  பொதுமக்கள் வாங்க தயங்குகிறார்கள.  11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பாஜக அரசு,  மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது”

இவ்வாறு  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.