சென்னையில் தனியார் வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், கைதானவர்கள் ஒருவருக்கொருவர் அவரிடம் தான் நகைகள் இருப்பதாக மாறி மாறி பொய் சொல்வதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி கிளை காவலாளி மற்றும் மேலாளர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இந்த கொள்ளை அரங்கேறியது தெரியவந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர் முருகனின் கூட்டாளிகளான பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, முக்கிய குற்றவாளி முருகன் நேற்று காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும் சூர்யா மற்றும் ஸ்ரீவத்சன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர். ஆனால் மீதமுள்ள நகைகள் சூர்யாவிடம் இருப்பதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை ஸ்ரீவத்சனை கோவையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் சூர்யா கோவைக்கு தப்பி சென்றதும், அங்கு ஸ்ரீவத்சன் உதவியோடு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதே நேரத்தில் தனிப்படை நம்மை நெருங்கி வந்து விட்டதை அறிந்த சூர்யா வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் தற்போது சரண் அடைந்துள்ளார். அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து போலீசார் கேட்டபோது, அவை அனைத்தும் முருகனிடம் உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் முருகனிடம் நடத்திய விசாரணையில் நகைகள் சூர்யாவிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருவரும் மாறி மாறி அவரிடம் தான் நகைகள் உள்ளது என பொய் சொல்லி வருவதால் காவல்துறையினர் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தனது பாணியில் விசாரித்தால் மட்டுமே உண்மை வரும் என்பதை அறிந்து கொண்ட காவல்துறையினர் கைதான 6 பேரிடமும் கிடுக்குபிடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
– இரா.நம்பிராஜன்








