அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான சம்பவத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றினரா? சட்ட விதிகள் சொல்வதென்ன? என்பதை நாம் இங்கே காணலாம்.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
விதிமுறைகளை பின்பற்றினரா அமலாக்கத்துறை அதிகாரிகள்? – சட்டமன்ற விதிகள் சொல்வதென்ன?
- சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டாலும், நீதிமன்றத்தால் சிறை தண்டணை விதிக்கப்பட்டாலும் அதை பற்றிய செய்தியை பேரவைத் தலைவருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
- கைது செய்வதற்கு அல்லது காவலில் வைத்திருப்பதற்கு காரணங்களையும், விளக்கங்களையும் சபாநாயகருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
- கைது செய்யப்பட்ட உறுப்பினர் எந்த இடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் அல்லது சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரத்தையும் உரிய படிவம் மூலமாக பேரவைத் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
- பேரவைத்தலைவருக்கு செய்தி கிடைக்கப் பெறும் போது பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தால் அதனை பேரவையில் அறிவிப்பார். இல்லாத பட்சத்தில் செய்தித்தாளில் வெளியிடுமாறு பேரவைத்தலைவர் அறிவிப்பார்.







