கல்லறையில் அமர்ந்து டீ அருந்த ஆசையா? அகமதாபாத்திற்கு டிக்கெட் போடுங்க…

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கல்லறையில் செயல்படும் டீக்கடை இணையத்தில் வைரலாகியுள்ளது. அகமதாபாத் லால் தர்வாஜாவில் அமைந்துள்ளது லக்கி டீ ஸ்டால்.  சுமார் 72 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடை கிருஷ்ணன் குட்டி என்பவருக்கு…

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கல்லறையில் செயல்படும் டீக்கடை இணையத்தில் வைரலாகியுள்ளது.
அகமதாபாத் லால் தர்வாஜாவில் அமைந்துள்ளது லக்கி டீ ஸ்டால்.  சுமார் 72 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடை கிருஷ்ணன் குட்டி என்பவருக்கு சொந்தமானது. இந்த கடை அப்பகுதியில் மிகவும் பிரசத்தி பெற்றது.  தற்போது கடை இருக்கும் இடம் ஒரு காலத்தில் மசூதியுடன் இணைக்கப்பட்ட கல்லறைகள் இருந்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சூஃபி துறவிகள் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறியாமல்  கிருஷ்ணன் குட்டி அந்த இடத்தை வாங்கியுள்ளார். பின்னர் என்ன செய்வது என்று தெரியாத அவர், டீக்கடை தொடங்குவது என முடிவு செய்துள்ளார்.  கல்லறைகளை அப்படியே விட்டு விட்டு கிடைத்த இடத்தில் கடை அமைத்துள்ளார். மெல்ல மெல்ல வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி தற்போது பிரபலமான கடைகளில் ஒன்றாக இயங்கி வருகிறது.  இந்த கடைக்கு அடிக்கடி வரும் பிரபல ஓவிய கலைஞர் எம்.எஃப் ஹுசைன் தனது ஓவியங்களில் ஒன்றை 1994 ஆண்டு கடையின் உரிமையாளருக்கு பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த ஓவியம் கடையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடை தொடர்பான வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. அதே நேரம் சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இறந்தவர்களை மதிப்பது என்பது என்றால் நாம் கல்லறைக்கு அருகில் அமர்ந்து சாப்பிடுவது என்று அர்த்தமல்ல. இறந்தவர்களுக்கு அமைதி தேவை என்றும், கல்லறைக்கு சிறிது இடம் கொடுத்தால்தான் அமைதி கிடைக்கும் என்றும்,  கல்லறையில் அமர்ந்து சாப்பிட அல்ல என்றும் இணையவாசி ஒருவர் பதிவு செய்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.