தமிழ்நாட்டில் 3 மாதங்களாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எதிர்க்கட்சித் தலைவரின் அதிமுக ஆட்சியில் 2017-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் (எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்ற பிப்ரவரி மாதத்தில்) துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முற்றிலுமாக விநியோகிக்கப்படவில்லை.
மே மற்றும் ஜுன் மாதங்களில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, கொள்முதல் செய்து அதிமுக ஆட்சியில் போல் இல்லாமல் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எல்லோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக 18.06.2024 அன்று விரிவாக அறிக்கை வெளியிட்டு மே மாதம் பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் ஜுன் மாதம் முழுதும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தேன். அதன்படி மே மாதத்திற்கான துவரம் பரும்பு மற்றும் பாமாயில் முற்றிலும் நுகர்வு செய்யப்பட்டுக் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன.
27.06.2024 அன்று உணவுத்துறை மானியக் கோரிக்கையின் போதும் இதுபற்றிக் குறிப்பிட்டு ஜூன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜுலை மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தேன். அதன்படி அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் மற்றும் ஜுலை மாதங்களுக்குத் துவரம் பருப்பும் பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தெரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே திமுக அரசு மீது வீண்பழி சுமத்தித் தன் “X” பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தன் ஆட்சிக் காலத்தில் இரண்டு மாதங்கள் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் யாருக்கும் வழங்காமல் இருந்ததை எண்ணிப் பார்க்காமல் அனைவருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கி வரும் திமுக ஆட்சியைப் பற்றிக் குறை கூறுவது அழகா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.







